RSS-ன் முயற்சியால் வெள்ளி விழா காணும் திருவள்ளுவர் சிலை!
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முயற்சியால் தேசத்தின் தென்கோடியில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவரின் சிலை வெள்ளி விழா கொண்டாடுகிறது.
கன்னியாகுமரியில் இருந்த இரண்டு பாறைகளையும் பயன்படுத்தி சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டும் பணியை, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அகில பாரத பொதுச் செயலாளர் ஏக்நாத் ரானடே தலைமையில் செயல்பட்ட விவேகானந்தா நினைவு மண்டபக் குழுவிடம் தமிழக அரசு ஒப்படைத்தது.
தொடர்ந்து சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டி முடிக்கப்பட்டபின், அருகிலிருந்த மற்றொரு பாறையை 1977-ம் ஆண்டு ஜூலை 17-ம் தேதி தமிழக அரசிடம் விவேகானந்தா கேந்திரம் திருப்பி ஒப்படைத்தது.
தொடர்ந்து 1979-ம் ஆண்டு மார்ச் 15-ம் தேதி திருவள்ளுவருக்கு நினைவாலயம் மற்றும் சிலை அமைக்க வேண்டும் என்று விவேகானந்தா கேந்திரம் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தும், அதற்கான திட்டத்தையும் அனுப்பியது.
இந்த திட்டத்தை ஒருங்கிணைத்த ஏக்நாத் ரானடேவின் முயற்சியின் அடிப்படையில் தமிழக அரசு அவரது யோசனையை ஏற்று, 1979-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திருவள்ளுவர் நினைவாலயத்திற்கான அடிக்கல்லை அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரும், திருவள்ளுவர் சிலைக்கான அடிக்கல்லை அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாயும் நாட்டினர்.
அதன் பிறகு 133 அடி உயரத்தில் கட்டப்பட்டு இன்று வரை கம்பீரமாக கடல் நடுவே திருவள்ளுவர் சிலை காட்சியளித்து வருகிறது. ஆர்.எஸ்.எஸ் அகில பாரத பொதுச் செயலாளர் ஏக்நாத் ரானடேவின் தீவிர முயற்சியால் தென்கோடியில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவரில் சிலை தற்போது வெள்ளி விழா கொண்டாடுகிறது.